பதிவு செய்த நாள்
14
நவ
2013
11:11
சென்னை: சென்னை, முகப்பேரில் உள்ள, ஸ்ரீ சந்தான சீனிவாச பெருமாள் கோவிலை, இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தி, கோவிலுக்கு, செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என, பக்தர்கள், அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர். சென்னை, முகப்பேர், ெவள்ளாளத் தெருவில், ஸ்ரீ சந்தான சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. முகப்பேரில், 167 ஆண்டுகளுக்கு முன், கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர், அருணாசல முதலியார். இவரது கனவில், ஒருநாள் பெருமாள் தோன்றி, அவருக்கு சொந்தமான இடத்தில், பூமிக்கு அடியில் புதையுண்டு இருப்பதாகவும், அந்த இடத்தில், கோவில் கட்டும்படியும் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, கோவில் உள்ள இடத்தில், பூமியை தோண்டி பார்த்தபோது, 9.5 அடி உயரத்தில், அபய ஹஸ்ததத்துடன் கூடிய, பெருமாள் சிலை கிடைத்தது. அச்சிலைக்கு, அருணாசல முதலியார் சன்னிதி கட்ட ஆரம்பித்தார்; இது செவிவழி செய்தி.
பெயர் காரணம்: அவரது மறைவுக்கு பின், அவரது மகன், கோவில் திருப்பணியை தொடர்ந்தார். அப்போது, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதி, இக்கோவிலுக்கு வந்து, சந்தான பாக்கியம் பெற்றதால், இப்பெருமாளை, சந்தான சீனிவாசப் பெருமாள் என, அழைக்க துவங்கினர். நாளடைவில், இப்பெயரே நிலைபெற்றது. இக்கோவில், ஸ்ரீ சந்தான சீனிவாசப் பெருமாள் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், நிர்வகிக்கப்படுகிறது.
முறைகேடு: இக்கோவிலுக்கு, தற்போது வருமானம் அதிகரித்துள்ளது. பக்தர்கள் பணம் மற்றும் நகைகளை, காணிக்கையாக வழங்குகின்றனர். மேலும், அறக்கட்டளை சார்பில், பொது மக்களிடம் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதில், முறைகேடு நடைபெறுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில், நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு, பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பணம் செலுத்தியவர்களுக்கு, ரசீது வழங்கப்படவில்லை. முறைகேடுகளை தடுக்க, கோவில் நிர்வாகத்தை, இந்து சமய அறநிலையத் துறை ஏற்று நடத்த வேண்டும். கோவிலுக்கு செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரி களுக்கு, மனு அனுப்பி உள்ளனர். அதன்படி, இந்து சமய அறநிலையத் துறையும், விசாரணையை துவக்கி உள்ளது. விசாரணையை விரைவாக முடித்து, கோவிலை கையகப்படுத்தி, கோவிலை நிர்வகிக்க, செயல் அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது, பக்தர்களின் விருப்பமாக உள்ளது.