பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
பாட்னா: பீகார் மாநிலத்தில், நாளந்தாவிற்கு அருகில், தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், மூன்றாவது, புராதன பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட, நாளந்தா மற்றும் விக்கிரசீலா என்ற, இரு புராதன பல்கலைக்கழகங்கள், பீகார் மாநிலத்தில் உள்ளன. நாளந்தாவில் இருந்து, 50 கி.மீ.,யிலும், பாட்னாவில் இருந்து, 35 கி.மீ.,யிலும் தெல்ஹடா அமைந்துள்ளது. இப்பகுதியில், 2009ம் ஆண்டு முதல், அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெல்ஹடா பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், பல்கலைக்கழகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில், தொல்லியல் துறை இயக்குனர் அதுல் குமார் வர்மா தெரிவித்தார். பண்டைய காலத்தில், தெல்ஹடா, சோன் நதிக்கரையில் அமைந்திருந்தது. இங்கு, மிகவும் அழகான புத்த மடம் ஒன்று இருந்ததாக, இத்சீன் என்ற, சீன யாத்திரீகர், தன் பயணக்கட்டுரையில் எழுதியுள்ளார். இப்பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், புத்த மடத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; கல் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலைகள், யானைத் தந்தங்களில் செய்யப்பட்ட சிறிய சிற்பங்கள் கிடைத்துள்ளன; காற்று வீசும் போது ஒலி எழுப்பும், தாமிரத்தாலான மணி, மகாலட்சுமி சிற்பம், புத்தர் உள்ளிட்ட ஏராளமான சிற்பங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில், கோவில் இருந்ததற்கான அடையாளம் உள்ளது.