பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, 8ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், முக்கிய விழாவான, மஹா ரத தேரோட்டம்நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து, 60 டன் எடை கொண்ட, 63 அடி உயரமுள்ள மஹா ரதத்தில், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின், மஹா ரத தேரோட்டம், பகல், 12:40 மணிக்கு துவங்கியது. கலெக்டர் ஞானசேகரன் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரோட்டத்தின் போது, பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பியவாறு, வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவக் குழுவினருடன், இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும், பாதுகாப்பு பணியில், 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். வரும், 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. வேலூர் ஆவின் நிறுவனத்திடமிருந்து, 3,500 கிலோ நெய்யும், தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,000 மீட்டர் காடா துணி, திருப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.