பதிவு செய்த நாள்
15
நவ
2013
05:11
திருவள்ளூர் சுங்குவார் சத்திரம்-பேரம்பாக்கம் சாலையில், காரணை(அ) நரசமங்கலம் என்ற இடத்திலிருந்து உள்ளே 3 கி.மீ தொலைவில் உள்ளது முதுகூர். தொண்டை மண்டலத் திருத்தலங்களுள் 15-வது திருத்தலமான திரு ஆலங்காட்டுடன் தொடர்புடைய திருத்தலம் இது. இங்குதான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கோயிலின் ஈசான்ய மூலையில் உடையார் குளம் என்ற தீர்த்தம் உள்ளது. மூலமூர்த்தி(லிங்கம்) கிழக்கு நோக்கிய அமைப்பில் இருக்கிறார். இறைவன் ஆலங்காட்டப்பர், முத்து ஈஸ்வரர், காம்போதீஸ்வரர், புற்றிடங்கொண்ட நாதர், தற்பர நாதேசுவரர், சுந்தர விடங்கர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது சுந்தரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஆலங்காட்டு அம்பிகை, முத்து ஈஸ்வரி, காம்போதீஸ்வரர், புற்றிடங் கொண்ட நாயகி, தற்பரமேஸ்வரி, சுந்தர நாயகி என்றெல்லாம் போற்றப்படும் இறைவி தற்போது மீனாட்சி அம்மன் என்று வழங்கப்படுகிறாள். சிவாலயங்களில் புற்று அமைவது அபூர்வம் இங்கே தலமரமான வேம்பின் கீழ் புற்று இருக்கிறது. இப்புற்றில் இருக்கும் அரவம் சிலசமயம் இரவில் இறைவனை சுற்றிச்சென்ற அடையாளம் தெரியும்.
இந்தக் கோயில் உருவாவதற்குக் காரணமாக ஒரு புராண சம்பவம் கூறப்படுகிறது. சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் தேவர், முனிவர், மக்கள் அனைவருக்கும் பல இன்னல்களைக் கொடுத்து வந்தனர். அதனைத் தாங்க இயலாது எல்லோரும் காப்பாற்ற வேண்டினர். இந்திரன், நாம் அனைவரும் திருக்கயிலாய மலை சென்று சிவபெருமானிடம் முறையிடுவோம் எனக் கூறினார். அப்படியே எல்லோரும் சென்றபோது, சிவபெருமான் உமையவளோடு ஆசி வழங்கினார் அனைவரின் சார்பாகவும் இந்திரன் ஈசனிடம் தங்கள் பிரச்னைகளைச் சொன்னான். அப்படி அவன் முறையிட்டபோது, உமையவள் அனைவரின் மீதும் இரக்கப்பட்டு தனது திருப்பார்வையிலிருந்து காளி தேவியைத் தோற்றுவித்தாள். எட்டுக் கரங்களுடன் சூலம், உடுக்கை, டமாருகம், கத்தி, கோடயம், துடி, அபயம், வரதம் ஆகியன தாங்கி காளிதேவி புறப்பட, பூதப்படைகளோடு நந்தியம்பெருமான் சேனாதிபதியாக உடன் சென்றார். ஆலங்காடு வந்து சும்பன், நிசும்பனை அழித்த காளி, அசுரர்களின் குருதியை உண்டதால் ஏற்பட்ட வெறியின் காரணமாக அதி உக்ரமாக இருந்தாள். திரிலோக சஞ்சாரியான நாரதர், நடந்தவற்றை சிவபெருமானிடம் கூறினார். சிவபெருமான், காளியை சூட்சியினால் வெல்ல நினைத்தார். உடனே இந்திரனை அழைத்து ஆலங்காட்டில் நான் சந்தியா தாண்டவத்தை ஆட நினைக்கிறேன் ஆகவே விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு அங்கே ஒரு தேவ சபையை கட்டி முடிக்கச் சொல்! என்றார். அப்படியே அங்கு ஒரு வேதசபை நிறுவப்பட்டது.
விஷ்ணு, பிரமன், லட்சுமி, சரசுவதி, முப்பத்து முக்கோடி தேவர்கள், 48,000 ரிஷிகள், அஷ்டவசுக்கள், திக் பாலகர்கள், கிம்புருடர், ஜனகர்தனர்கள், வித்யாதரர்கள், இந்திரன், சந்திரன், திக்கஜங்கள், மூஞ்சிகேச முனிவர், பதஞ்சலி ஏழு கன்னியர், அத்திரி முனிவர், ஆங்கீரச முனிவர், கலைக்கோட்டு முனிவர், சச்சிதானந்த முனிவர், சந்தகூன் முனிவர், பினாகி முனிவர், ஏரண்டமுனிவர், வசிட்டர், அகத்திய முனிவர் ஆகியோர் புடை சூழ்ந்து வந்தனர். குபேரன் அந்த வேத சபையின் மண்டபத்தில் ரத்தினங்களைப் பரப்பினார். திருமால் கடத்தினை வாசிக்க, கலைமகள் கச்சபீ என்னும் வீணையை வாசிக்க, நந்திதேவர் மத்தளம் கொட்ட, பிரம்மதேவன் சாமகான கீதம் பாட, முனிவர்கள் வாழ்த்த, சிவபெருமான் எட்டுத் திருக்கரங்களுடன் அனல், சூலம், துடி, பாம்பு, உடுக்கை, ஏந்தி இருகரங்கள் அபிநயிக்க ஒரு கரம் அபயம் காட்ட காளிதேவியோடு நடனம் ஆடத் தொடங்கினார். அப்போது தமது இடது காதிலே இருந்த மணிக்குழையை கீழே விழச் செய்து; பின்னர் அந்த மணிக் குழாயை இடது காலால் எடுத்து, தன் இடது பாதத்தை விண்ணிற்கு உயர்த்தி, அந்த மணிக் குழையை காதில் பொருத்தினார். பெண் என்பதால் அவ்வாறு செய்ய இயலாத காளி தேவி, நாட்டியத்தில் தோற்று நின்றாள். சிவபெருமான் தாண்டவம் ஆடிய அந்த சமயத்தில், அவரது கழுத்தில் இருந்த முத்தாபரணத்திலிருந்து ஒரு முத்து அறுந்து விழுந்த இடமே இத்தலம் என்கிறது தலபுராணம் முத்து விழுந்த காரணத்தால் முத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் முதுகூர் என்று ஆனது. அந்த முத்தானது ஒரு லிங்கமாக மாறியது. அந்த லிங்கமே இப்பொழுதும் திருத்தலத்தில் இருப்பது.
நடேசனின் தாண்டவம் முடிந்ததும் அனைவரும் அவரவர் இருப்பிடம் சென்றார்கள். உமையவளின் அம்சமான சப்த கன்னியர் மட்டும், இந்த உலகத்தைச் சுற்றிப்பார்க்க எண்ணி வானில் வலம் வந்தார்கள். அப்போது இப்பகுதியில் இருந்த முத்து லிங்கம் ஒளிவீசக் கண்டனர் உடனே இப்பகுதியில் இறங்கி, சிவபெருமானைத் துதித்தனர். இதற்கு ஆதாரமாக இவ்வூரின் மேற்கில் உள்ள கன்னியம்மன் ஆலயத்தின் முதல் பிராகாரத்தில் நடராஜரின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.