காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரின் மத்தியில் கோபாத்ரி மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது சிவசங்கர் ஆலயம். மகராஜ் கோபாதித்யா என்பவரால் கட்டப்பட்டதால் இக்கோயில் அமைந்துள்ள மலையும் அவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது.
ஆதிசங்கரர் கி.பி. 750-ம் வருடம் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டதாக வரலாறு. இக்கோயிலுக்கு விஜயம் செய்த பின்னரே ஆதிசங்கரர் நான்கு அத்வைத கல்வி நிலையங்களை ஸ்தாபித்ததாக கூறப்படுகிறது. இக்கோயிலை சங்கராசாரியார் கோயில் என்றே குறிப்பிடுகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள குகையில் அமர்ந்து தியானித்துவிட்டு மன அமைதியுடன் திரும்புகின்றனர்.எண்கோண வடிவ அடித்தளத்துடன் அமைந்துள்ள இக் கோயிலின் பிரதான மேல் தளத்தில் நின்று பார்த்தால் அழகு கொஞ்சும் தால் ஏரியுடன் கூடிய ஸ்ரீநகர் மிக அழகாகத் தெரிகிறது. இங்கு லிங்க வடிவில் காட்சி தரும் சிவசங்கரின் தரிசனம் மன அமைதியையும் நிம்மதியையும் தருகிறது.