பதிவு செய்த நாள்
15
நவ
2013
06:11
சபரிமலை: சபரிமலை நடை, மாலை திறக்கப்பட்டு, நாளை அதிகாலை, மண்டல காலம் துவங்குகிறது. இந்த சீசனில் வரும் பக்தர்களுக்காக, சிறப்பு ஏற்பாடுகளை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்துள்ளது. சபரிமலை நடை, இன்று மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. புதிய மேல்சாந்திகள் பதவியேற்கும் நிகழ்ச்சி முடிந்து, இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல், 41 நாட்கள் நடைபெறும் மண்டல காலம் துவங்குகிறது. இந்த ஆண்டு பக்தர்களுக்காக, சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. குறிப்பாக, வரிசையில் அதிக நேரம் காத்திருக்காமல் இருக்க, கேரள போலீசின், "ஆன்-லைன் முன்பதிவில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பம்பை முதல், சன்னிதானம் வரை செல்லும் பாதையில், அதிக நிழற்கொட்டகைகளும், மரக்கூட்டத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்க, சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பிரசாதம் வாங்குவதற்காக, ஆங்காங்கே பில்லிங் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்கேற்ப ரசீதுகளை பெற்று, பிரசாதம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அன்னதானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாளிகைப்புறம் கோவில் அருகே ஏற்படும் நெரிசலை குறைக்க, புதிதாக ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது.