சபரிமலை: குருவாயூர் மாடலில் சபரிமலையிலும் ஸ்ரீகோயிலில் இருந்து நேரடியாக பிரசாதம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு மண்டல சீசனில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் ஸ்ரீகோயிலில் முன்புறம் செல்லும் விஐபி மற்றும் பக்தர்களுக்கு கோயிலில் இருந்து பூஜாரி இலையில் திருநிறு, சந்தனம், பூ உள்ளிட்ட பிரசாதம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. எனினும் கியூவில் நீண்ட நேரம் காத்திருந்து வரும் பக்தர்களுக்கு இந்த பிரசாதம் கிடைப்பதில்லை. பக்தர்கள் பிரசாதம் வாங்க வேண்டுமெனில் தந்திரி அல்லது மேல்சாந்தியின் அறைக்கு சென்று பிரசாதம் வாங்க வேண்டும். இவ்வாறு இரண்டு நிலை இருக்கக்கூடாது என்ற முடிவை திருவிதாங்கூர் தேவசம்போர்டு எடுத்தது. பிரசாதம் கிடைக்காத பக்தர்களுக்கு ஒரு வித ஏக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கேரளாவில் அனைத்து கோயில்களில் இருந்தும் நேரடியாக பிரசாதம் கொடுக்க தடை விதித்து தேவசம்போர்டு கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சபரிமலையிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மண்டல சீசன் தொடங்கிய கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் சபரிமலை ஸ்ரீகோயிலில் இருந்து பிரசாதம் கொடுக்கப்படவில்லை. பக்தர்கள் மேல்சாந்தி மற்றும் தந்திரியை சந்தித்து பிரசாதம் வாங்கி செல்கின்றனர். குருவாயூர் கோயிலில் நீண்ட நெடுங்காலமாகவே ஸ்ரீகோயிலில் இருந்து பிரசாதம் கொடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.