பதிவு செய்த நாள்
20
நவ
2013
10:11
திருமலை ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள, பழமையான மண்டபத்தை பாதுகாக்க, இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணி நேற்று துவங்கியது. திருமலையில், 600 ஆண்டுகளுக்கு முன், ஏழுமலையான் கோவில் முன் வாசலில் இருந்து, 10 மீட்டர் தொலைவில், நீண்ட தூண்கள் கொண்ட, மண்டபம் கட்டப்பட்டது. கோவிலின் பவித்ரோற்சவம் நடத்த, 1464ம் ஆண்டு, சாளுவ மல்லையா என்ற மன்னர், ஆயிரங்கால் மண்டபத்தை, கோவில் எதிரே கட்டினார். ஆனால், மாட வீதியை அகலப்படுத்தும், திட்டத்தை மேற்கொண்டதால், 2003ல், ஆயிரங்கால் மண்டபத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அகற்றியது. இந்நிலையில், அதன் அருகே இருந்த, 600 ஆண்டுகள் பழமையான மண்டபத்தின் நான்கு தூண்களிலும், விரிசல் ஏற்பட்டது. அதனால், அந்த மண்டபத்தையும் அகற்றும் எண்ணம், தேவஸ்தானத்திற்கு எழுந்தது. ஆனால், அங்குள்ள, சில யாதவ சங்கங்கள் இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தன. மேலும், "மண்டபத்தை அகற்ற கூடாது என, திருப்பதி நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்தன. கோர்ட் தீர்ப்பு தேவஸ்தானத்திற்கு, சாதகமாகவே கிடைத்தது. ஆனாலும், அதை இடிக்க, அப்போதிருந்த தேவஸ்தான அதிகாரிகள் முன் வரவில்லை. சென்னை ஐ.ஐ.டி., விரிவுரையாளர் நரசிம்ம ராவ், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த மண்டபத்தை ஆய்வு செய்தார். "மண்டம் இடிந்து விழும் அபாய கட்டத்தில் உள்ளது என, தேவஸ்தானத்திற்கு, எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, தேவஸ்தானம், மண்டபத்தை இடிக்க முற்பட்டதில், பலத்த எதிர்ப்பு எழுந்ததால், தேவஸ்தானம் அந்த மண்டபத்தின் பாதுகாப்பை பலப்படுத்த, முயற்சி மேற்கொண்டது. மிகவும் உறுதியான இரும்புத் தூண்களால், மண்டபத்தின் நான்கு கால்களையும் பலப்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த பணி இம்மாத இறுதிக்குள், முடிவு பெற உள்ளது. நமது நிருபர்