ஆத்தூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2013 04:11
மயிலாடுதுறை: ஆத்தூர் கோமளவள்ளி நாயிகா சமேத சுகவாசி நாராயண பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த ஆத்தூரில் உள்ள ஸ்ரீகோமள வள்ளி சமேத சுகவாசி நாராயண பெருமாள் கோவில் மிகப் பழமை வாய்ந்தது. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இந்த கோவிலின் பெருமையை தனது ஆற்றுப்புராணம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தகோவில் காலப்போக்கில் மிகவும் சிதிலமடைந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த மகாலெட்சுமி சுப்பிரமணியம் முயற்சியில் துபாயை சேர்ந்த துரைமாணிக்கம், பரம்பரை அறங்காவலர் பாலகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் உதவியுடன் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 18 ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி 4 கா ல யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை யாகசாலையிலிருந்து கடங் கல் புறப்பட்டு 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை திருமங்கைச்சேரி வெங்கட்ராம பட்டாச்சாரியார், சித்தமல்லி ஸ்ரீராம் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்து வைத்தனர். கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மணிவண்ணன், பெருமாள் கைங்கர்ய சபா நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு காரைக்கால் ஏகஜோதி சபை காளிதாஸ் அன்னதானம் வழங்கினார். மனல்மேடு இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.