மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி காவிரி கரையில் புகழ் பெற்ற அருள்மிகு காசிவிசாலாட்சி உடனாகிய காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. கோவிலில் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டத்தின் முயற்சியில் காவிரி அன்னைக்கு தனிக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று காலை பூர்ணாகுதியுடன் முடிந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு சூரியனார்கோவில் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காவிரி அன்னை கோவில் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காவிரிஅன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை மெலட்டூர் அய்யப்ப சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் சோழபுரம் மணி குருக்கள் ஆகியோர் செய்து வைத்தனர். கும்பாபிஷேகத்தில் சென்னை லட்சுமிநாராயணன், கும்பகோணம் பன்னீர்செல்வம், சண்முகம்,கஞ்சனூர் கலியபெருமாள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.