பதிவு செய்த நாள்
25
நவ
2013
10:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் நடந்த திருவாசக முற்றோதல் ஞானவேள்வியில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் உலக நன்மைக்காக திருவாசக முற்றோதல் ஞானபெருவேள்வி நேற்று நடந்தது. ஞானானந்தா சத்சங்க மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் அம்பிகையுடன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டு, வேள்வி துவங்கியது. நிகேதன் அறக்கட்டளை அறங்காவலர்கள் நித்யானந்தகிரி சுவாமிகள், ஓங்காரநந்தர் சுவாமிகள் தலைமை தாங்கி கணபதி, சிவன், அம்பிகை, சூரியநாராயணன், லஷ்மிநாராயணன் சுவாமிகளுக்கு, சிவ பஞ்சாயதன பூஜைகள் செய்தனர். தொடர்ந்து திருவாசக முற்றோதல் பெருவேள்வியை துவக்கி வைத்தனர். ஞானானந்தா அறக்கட்டளை அறங்காவலர்கள் தேவராஜன், கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ஸ்ரீபதி, பரமேஸ்வரன், சுவாமிநாதன் மற்றும் திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமார் ஆஸ்ரம நிர்வாகி ஜஸ்டிஸ் அருணாச்சம் கலந்து கொண்டனர். திருச்சி சேக்கிழார் மன்றம், திருவாசகம் முற்றோதல் குழு, உறையூர் பஞ்சவர்ணஸ்வாமி கோவில் வார வழிபாட்டு மன்றம், மணப்பாறை திருவாசகம் அன்பர்கள் குழு, சென்னை தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றத்தை சேர்ந்த சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து வேள்வியை நடத்தினர். பக்தர்களுக்கு, திருவாசக புத்தகத்துடன் கூடிய திருநீற்று பை பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஞானானந்தா நிகேதன் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.