பக்தர்கள் கூட்டத்திற்கேற்ப சபரிமலையில்.. நடை அடைக்கும் நேரம் மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 04:11
தேவசம்போர்டு புது முடிவு: பக்தர்கள் கூட்டத்திற்கேற்ப சபரிமலையில் நடை திறந்து அடைக்கும் நேரத்தை மாற்றியமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் மண்டலபூஜை காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணிக்கும், மாலை நான்கு மணிக்கு நடை திறந்து இரவு 11 மணிக்கும் அடைக்கப்படும். கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நான்கு நாட்களாக தொடர்ந்து கூட்டம் அதிகமாக உள்ளதால் 24 மணி நேரமும் 18-ம் படியில் பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். நடை அடைக்கப்பட்டிருக்கும் போது படியேறுபவர்கள் மீண்டும் வடக்கு வாசல் வழியாக சென்று சாமி கும்பிட வேண்டும். இதை தொடர்ந்து கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் நடை திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அதிகாலை நான்கு மணிக்கு பதிலாக 3.30-க்கு நடை திறக்கும். அதுபோல பகல் ஒரு மணிக்கு பதிலாக இரண்டு மணிக்கு அடைக்கப்படும். மாலையில் நான்கு மணிக்கு பதிலாக 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு பதிலாக 11.30-க்கு அடைக்கப்படும். இது அந்தந்த நாட்களில் நிலைமைக்கேற்ப கோயில் நிர்வாக அதிகாரி, தந்திரி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார்.