பதிவு செய்த நாள்
25
நவ
2013
12:11
சபரிமலை: சபரிமலையில், புஷ்பாபிஷேகத்துக்கு, 8,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூக்கள் கொண்டு வரத் தேவையில்லை. பூ கொண்டு சென்றாலும், இதே கட்டணம் செலுத்த வேண்டும் என, தேவசம்போர்டு அறிவித்துள்ளது. "சபரிமலையில், புஷ்பாபிஷேக கட்டணம் 2,000 ரூபாய் என்றும்; பூக்களை பக்தர்கள் கொண்டு வரவேண்டும் எனவும், தேவசம்போர்டு அறிவித்தது. இணையதளத்திலும், இது வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், பக்தர்கள் பூக்கள் கொண்டு வந்தாலும், 8,500 ரூபாய் செலுத்த வேண்டும் என, நிர்வாகத்தினர் கூறினர்; இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து தேவசம் நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் கூறியதாவது: புஷ்பாபிஷேக பூக்களை வழங்கும் உரிமை, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தேவசம்போர்டுக்கு, 2,000 ரூபாய்; பூக்கள் வழங்கும் ஒப்பந்ததாரருக்கு, 6,500 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. "பக்தர்கள், 2,000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டில், பூக்கள் தருவதாக சில இடைத்தரகர்கள், பக்தர்களிடம் பணம் பறித்தனர். இதனால், ஒப்பந்ததாரருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு முதல் புஷ்பாபிஷேகத்துக்கு, மொத்த கட்டணமாக 8500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.