பதிவு செய்த நாள்
27
நவ
2013
10:11
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மழை வேண்டி, கொடும்பாவிக்கு மாரடித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் வினோத வழிபாடு மற்றும் சடங்குகளை நேற்று நடத்தினர். வேதாரண்யம் அடுத்த தென்னடார், தகட்டூர், பஞ்சநதிக்குளம் போன்ற கிராமங்களில் ஐந்தாயிரம் ஹெக்டரில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்கி, போதிய அளவுக்கு பெய்யாததால், தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. கடந்த 2 தினங்களுக்கு, முன் வேதாரண்யம் பகுதியில் மழை பெய்தபோது, மேற்கண்ட தென்னடார், பஞ்சநதிக்குளம் பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீர் வற்றி குளம், குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன. மேலும் விவசாய குடும்பத்தினர் குடிப்பதற்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழையின்றி களை எடுப்பு, பயிர்களுக்கு உரமிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மழைக்கு அதிபதியான சுக்ரன் இடம்பெயர்ந்த கிரகத்தை, ஆசைநாயகியாக உருவகப்படுத்தி, அந்த உருவக கொடும்பாவியை கட்டி, பெண்கள் மாரடித்து, ஒப்பாரி வைத்து, வினோத வழிபாடு சடங்குகளை நடத்தினால் மழை பெய்யும் என்பது, இப்பகுதி விவசாயிகள் நம்பிக்கையாக உள்ளது. இதன்படி, மழையின்றி கருகும் பயிர்களை காக்கும் வகையில், மழை வேண்டி தென்னடார் கிராமத்தில் நேற்று மாலை 3 மணிக்கு தாரை, தப்பட்டையுடன் மாரடித்து, பெண்கள் ஒப்பாரி வைத்தனர். தொடர்ந்து, கொடும்பாவியை கிராமத்தின் வழியே கட்டி இழுத்து வந்து, தண்ணீரில் கரைத்தனர். இவ்வாறு, கட்டி இழுத்தால் மழை பெய்யும் என, நம்பிக்கை உள்ளதால், வழிபாட்டை முடித்துவிட்டு, மழைக்காக வேதாரண்யம் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.