திருப்புல்லாணி கோயிலில் ஏகாதசி மண்டபம் திருப்பணியில் தொய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2013 10:12
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி மண்டபம் திருப்பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் மண்டபம் திறக்கப்படுமா என்பது பக்தர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் சுவாமி கோயில் 108 வைணவ சேஷத்ரங்களில் 44வது ஆகும். கடந்தாண்டு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வைகுண்ட ஏகாதசி மண்டபம், தீர்த்த மண்டபம் புனரமைக்கும் திருப்பணிகள் துவங்கியது. இரண்டு ஆண்டுகளாகியும் நிறைவடையாத நிலையில் உள்ளது. ஆமை வேகத்தில் நடந்த பணிகளும் கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வரும் ஜன.,11ல் நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு ஏகாதசி மண்டபத்தில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.கடந்தாண்டு திருப்பணிகள் நடந்து வந்ததால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.அதே நிலை மீண்டும் ஏற்படாத வகையில் கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திவான் மகேந்திரன் கூறியதாவது; மணல் தட்டுப்பாடு காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக பணியை முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,என்றார்.