ரிஷிவந்தியம்: பெரிய கொள்ளியூர் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனை அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டு கோவிலை புதுப்பிக்க வேண்டும். 500 ஆண்டுகள் ரிஷிவந்தியம் ஒன்றியம் பகண்டை கூட்டுரோடு அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் உள் ளன. இந்த கோவில்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளன. பூஜைகள் நிறுத்தப்பட்டு பக்தர்கள் செல்வதில்லை. கோபுரம், சுற்றுச்சுவர் சேதமடைந்து கோவில் இருக்கும் இடம் தெரியாமல் முள்புதர்கள் வளர்ந்தன.
ஆக்கிரமிப்பு: கோவிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றியுள்ளனர். கரும்பு, நெல் பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இப்பயிர்களுக்கு இடையே பாழடைந்த மண்டபம் மட்டும் கோவில் இருந்த அடையாளத்தோடு பரிதாபமாக காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பக்தர்கள் முயற்சியால் கோவில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. அப்போது கருவறையில் புதைந்து கிடந்த சிவலிங்கம் தோண்டி எடுத்து அந்த பகுதியில் வெட்ட வெளியில் வைத்து பூஜைகள் செய்கின்றனர். இக்கோவில் சுவற்றில் கல்வெட்டு காணப்படுகின்றன. இது தெளிவாக இல்லையென்றாலும் கி.பி 1541ம் ஆண்டை சேர்ந்தவை எனவும், பாண்டியர் காலத்தில் கட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது. இக்கல்வெட்டுகளில் உள்ள தகவல் படி சுவாமியின் பெயர் அருணாச்சலேஸ்வரர் என்றும், இந்த ஊர் பெயர் 750 ஆண்டுகளுக்கு முன் மூரகநல்லூர் என்றும் பின் பெரியகோவிலூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய கொள்ளியூர் என்று அழைக்கப்படுகிறது. பாழடைந்த கோவிலை சுற்றி புதையல் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அவ்வப்போது சில மர்ம நபர்கள் இங்கு நிலத்தை தோண்டி தேடுவதும் தொடர்கிறது.
பெருமாள் கோவில் இக்கோவிலுக்கு அருகில் கற்களால் கட்டிய பழமையான பெருமாள் கோவில் இருந்த அடையாளம் உள்ளது. இப்பகுதியையும் சிலர் ஆக்கிரமித்து விளை நிலங்களாக மாற்றியுள்ளனர். மீதமுள்ள பகுதியில் முள்புதர்கள் வளர்ந்து கோவில் இருக்கும் இடம் தெரியாமல் அஸ்திவாரம் மட்டுமே உள்ளது.பெருமாள் கோவில் இருந்ததற்கான அடையாளத்தை வெளிக்காட்டும் வகையில் கரும்பு வயலுக்குள் கம்பீரமாக நிற்கும் கருட கம்பம் மட்டும் நிற்கிறது. கோவிலுக்கு பின்புறம் குளம் உள்ளது. இது முழுவதும் செடிகள் வளர்ந்து குட்டைபோல் காட்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குளத்தின் நீர் வற்றிய போது சேதமடைந்த நிலையில் விநாயகர், அம்மன் சிலையையும் கிடைத்துள்ளது.தொல்லியல் துறைமிக பழமையான சேதமடைந்த நிலையில் உள்ளகோவிலை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, புதுப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.