பதிவு செய்த நாள்
09
டிச
2013
10:12
செஞ்சி: ஆலம்பூண்டி, மங்களாம்பிகை உடனுறை ஆலகால ஈஸ்வரர் கோவிலில், 6ம் ஆண்டு சம்வஸ்த்ராபிஷேக விழா நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில், 800 ஆண்டுகள் பழமையான, மங்களாம்பிகை உடனுறை ஆலகால ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருப்பணிகள் செய்து, கடந்த 2008ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் 6ம் ஆண்டு சம்வஸ்த்ராபிஷேக பெருவிழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, காலை 7.00 மணிக்கு மூலவர், அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலை மகேஷ் பட்டர் தலைமையில் வேதபாராயணம் நடந்தது. பின்னர் கோ பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அபிஷேக பூஜைகளை, குப்புசாமி செய்தார்.