பதிவு செய்த நாள்
11
டிச
2013
04:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பழமையான ஜோதிர்லிங்கம், பராமரிப்பின்றி தூசி படிந்து கிடப்பதால், பக்தர்கள் வேதனையுடன் திரும்பி செல்கின்றனர். கடந்த 12ம் நூற்றாண்டில் உருவான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ராமாயாண வரலாற்றில் தொடர்புடையது. இக்கோயிலில் உள்ள பழமையான ஜோதிர்லிங்கத்தை (எரியும் தீபம் முன்புள்ள ஸ்படிகலிங்கத்தில், தீ ஜூவாலை ஒளியுடன் பிரம்ம ரேகை தெரியும்), பக்தர்கள் தரிசனம் செய்தால், ஆத்மா, சுத்தி அடையும் என்பது ஐதீகம். கடந்த 18ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மன்னர் முத்துவிஜயரகுநாத சேதுபதி, ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு செய்யும் 6 கால பூஜை போல், இந்த ஜோதிர்லிங்கத்திற்கு பூஜை செய்ய கட்டளை பிறப்பித்தார். நூறு ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடு நடந்தது. 1925ல் ஆங்கிலேயர்கள் ஆட்சியில், சுவாமி சன்னதியில் இருந்து ஜோதிர்லிங்கத்தை எடுத்து, சுவாமி சன்னதி எதிரே(முதல்பிரகாரம்) வைத்தனர். பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல், முதல் பிரகாரத்தின் மூலையில் போடப்பட்டது.
செம்பு தகட்டில் சன்னதி: ஜோதிர்லிங்கத்தின் மகிமை அறிந்து, மதுரையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 2002ல், ஜோதிர்லிங்கத்திற்கு, ரூ.5 லட்சத்தில் செம்பு தகட்டில் சன்னதி அமைத்து, கொடுத்தனர். அதன்பின், சன்னதியில் சில ஆண்டுகள் மட்டுமே பூஜை நடந்தது. காலபோக்கில் குருக்கள் பற்றாக்குறையால், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பூஜை நடத்தப்படவில்லை. சன்னதி அசுத்தமாகவும், ஜோதிர்லிங்கம் தூசி படிந்து நிறம் மாறி உள்ளது. மேலும் செம்பு தகடு கூரை பராமரிப்பு இன்றி, பொலிவு இழந்து இருப்பதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.
கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: 2014ல் நடக்கவுள்ள கும்பாபிஷேகம் முன், ஜோதிர்லிங்கம் மற்றும் செம்பு தகடு கூரை சுத்தம் செய்து, பராமரிக்கப்படும். பூஜை, வழிபாடு வழக்கம் போல் நடைபெறுகிறது, என்றார்.