மத்தியந்தனர் என்ற முனிவரின் மகனான மழமுனிவர் சிதம்பரம் நடராஜருக்கு தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயத்தில் அழுகல் பூக்களும் வந்து விடும். அழுகிய மலரால் சிவனை அர்ச்சித்தால் பாவம் வரும். விடிந்த பிறகு வெளிச்சத்தில் மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது. விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருளில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க வழிகாட்ட வேண்டும், என நடராஜரிடம் வேண்டினார். முனிவரின் வருத்தம் கண்ட நடராஜர் அவர் முன் தோன்றினார். முனிவர், பெருமானே! வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னை வணங்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களும், கைவிரல்கள் புலி நகமாகவும் மாற வேண்டும் அதோடு கால் விரல்களில் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை பறிப்பேன் என வேண்டினார்.சிவனும் அருள்புரிந்தார். புலியை சமஸ்கிருதத்தில்வியாக்ரம் என்பர். இதனால், மழமுனிவர் வியாக்ரபாதர் என பெயர் பெற்றார்.