திருவாபரணங்கள் வரும் பாதை ஆக்கிரமிப்பு: 28-ம் தேதி உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2013 05:12
சபரிமலை: திருவாபரணங்கள் வரும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது பற்றி விவாதித்து அதை அப்புறப்படுத்துவது தொடர்பாக வரும் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் பந்தளத்திலிருந்து பவனியாக எடுத்து வரப்படுகிறது. இந்த பவனி வருவதற்காக கிராமங்கள் மற்றும் காடுகளில் பாதை இருந்தது. இந்த பாதையும் நாளடைவில் ஆக்கிரமிக்கப்பட்டு சிறியதாகி விட்டது, பல இடங்களில் ஒற்றையடி பாதை போல உள்ளது, இதனால் திருவாபரண பெட்டி கொண்டு வருவதில் சிரமமான நிலை காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்ததை தொடர்ந்து பத்தணந்திட்டை கலெக்டரின் மேற்பார்வையில் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த ஆண்டு திருவாபரண பவனிக்கு முன்னால் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நல்ல அகலமான பாதையில் திருவாபரணத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பல இடங்களிலும் 42 மீட்டர் அகலத்தில் பாதை அமைந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க உயர்மட்ட கூட்டம் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் தேவசம்போர்டு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருவாபரண பவனி, அது செல்லும் பாதை மற்றும் பாதுகாப்பு பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.