விருதுநகர்: ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மலைகொழுந்தீஸ்வரர் குடவறை கோயிலை பாதுகாக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர். விருதுநகர்-ஸ்ரீவில்லிபுத்தூர் இடையே மூவரைவென்றான் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பல்லவ மன்னர்களால், இக்கோயில் கட்டப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. கோயில் கருவறை முன் மண்டபத்தில் உள்ள தூண்களில் பல்லவர்களின் சின்னமான சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்ககிரி மலையில் கருவறை சன்னதிக்கு சற்றுமேல் வற்றாத சுணை உள்ளது. அதிலிருந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் இந்நீரால் அபிஷேகம் செய்யப்படுவது மட்டுமின்றி, அன்னதானம் சமைப்பதற்கும் இந்த நீரே பயன்படுத்தப்படுகிறது. சிறப்புமிக்க இக்கோயில் கடந்த 3 ஆண்டுகளாக கல் உடைக்கும் பணியில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், மலையில் பல விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. பாறையில் வைக்கப்படும் வெடியின் அதிர்வால் கோயில் மண்டபம் சிதைந்தும், கற்கல் பெயர்ந்தும் கிடக்கின்றன. கோயிலைப் பாதுகாக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.