Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செவ்வாய் வருவாய் நலம் பல தருவாய்! திருமணத்திற்குப்பொருத்தம் நீங்களே பார்க்கலாம்! திருமணத்திற்குப்பொருத்தம் நீங்களே ...
முதல் பக்கம் » துளிகள்
பிரதோஷம் உருவான வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஏப்
2011
05:04

இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக , வெப்பமுடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது. திசை தோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷவேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திருக்கயிலாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.

தஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்கடலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டவர்! நாங்கள் அடிமைகள், தேவரீர் உடையவர். நாங்கள் உடைமைகள். நாங்கள் பாற்கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது. தேவரீருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தனர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்களைத் காத்தருளக் கோரித்துதித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடிவான கண்ணுதற் கடவுள் தமது அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வாய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதி வானவர்களால் அணுகமுடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத்திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணாமூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம்பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத்தை அடியவர்களாகிய அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த விடம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும். ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார். அதனால் செம்மேனி எம்மானுடைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இது கார்த்திகை மாதச் சனிப்பிரதோஷ காலமாகும். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.

சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா? என்று நாலம் வா என்று ஒரு பாடலை ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத் திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம விஷ்ணு இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங்கே? வேந்தனுயர் வாழ்வெங்கே? இந்திரன் செங்கோலெங்கே? வானோர் குடியெங்கே? கோலஞ் செய் அண்டங்கள் எங்கே? எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்? என்கிறார் வடலூர் வள்ளலார்.

பரவி வானவர் தானவர் பலரும்
கலங்கிட வந்த விடம்
வெருள உண்டு கந்த
அருள் என் கொல்? விண்ணவனே
கரவின் மாமணி பொன் கொழித்திழி
சந்து காரகில் தந்து பம்பை நீர்
அருவி வந்தலைக்கும்
ஆமாத்தூர் அம்மானே - திருஞானசம்பந்தர்

இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப்பின்வரும் பாடலால் அறிக.

மலை வளர் சிறகு கண்டேன்
வாரிதி நன்னீர் கண்டேன்
சிலை மதன் உருவு கண்டேன்
சிவன் சுத்த களம் கண்டேன்
அலை கடல் கடையக் கண்டேன்
அயன் சிரம் ஐந்துங் கண்டேன்
சிலை எரிஇரு கண் கண்டேன்
கொடுத்ததை வாங்கக்கண்டேன்

இந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.

இந்த்ரம் த்வயஷம் அமந்த
பூர்வ முதிதம் பஞ்சானனம் பத்மஜம்
வார்திம் சுத்த ஜலம் சிவம் சித களம்
லட்சுமிபதிம் பிங்களம்
சைலான் பகூகதரான ஹயான பிததா
காமஞ்ச சத்விக்ரகம்
சர்வம் த்ருஷ்டம் இதம்மயா ரகுபதே
தத்தா பஹாரம் விநா

இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.

மீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலைக் கடையுமாறு பணித்தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன்போலவே கடலைக்கடையத் தொடங்கினார்கள். பாற்கடலிருந்து இலக்குமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைச்ரவம் முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. இலக்குமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். ஏனைய பொருட்களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை, தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும் பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.

பிரதோஷம்: மறுநாள் திரயோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள். பரமகருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கயிலையில் அன்று மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை) பிரதோஷ வேளையில் சிவபெருமான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூலத்தைச் சுழற்றி, நந்தி தேவரின் இரண்டு கொம்புகளிடையே ஒரு யாமம் நடனமாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலைமகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தாண்டவமாடினார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடை வழியாக ஈசனிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடனமாடினார். தேவர்கள் அதனைத்தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள். அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை  உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேரமாயிற்று.

அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம். ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம். சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும். தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.

பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.

ஐந்து வகைப் பிரதோஷம் :

1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர்  உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.

2. பட்சப் பிரதோஷம்:  இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.

3. மாதப் பிரதோஷம்:  இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.

4. மகா பிரதோஷம்:  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)

5. பிரளயப் பிரதோஷம்:  இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.

பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல்லோரும் பெறுவோமாக!

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar