பதிவு செய்த நாள்
20
டிச
2013
11:12
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட கம்பத்துக்கு, புனித நீர் ஊற்றி பெண்கள் வழிபட்டு வருகின்றனர். ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 17ம் தேதி, பூச்சாட்டுதல், கம்பம் நடும் விழாவோடு, பொங்கல் திருவிழா துவங்கியது. தினமும், அதிகாலை முதல் இரவு வரை, மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்படுகிறது. டிசம்பர், 21ம் தேதி இரவு தீர்த்தம் எடுத்து வருதலும், 25ம் தேதி மாவிளக்கு, பொங்கல் வைத்தலும் நடக்கிறது. 26ம் தேதி காலை கம்பம் பிடுங்குதலும், அம்மன் மலர் பல்லக்கு ஊர்வலமும், மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. 27ம் தேதி மறுபூஜையோடு, பொங்கல் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், ஊர்பொதுமக்களும் செய்து வருகின்றனர்.