திருச்செந்தூர் கோயிலில் ரூ.87.5 லட்சம் செலவில் நடைபாதை: பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2013 10:12
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் சண்முக விலாசம் மண்டபம் முன்புறம் இருந்து மூவர் சமாது வரை ரூ.87.5 லட்சம் மதிப்பீட்டில் 20 அடி அகலத்தில் புதிதாக நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. தற்போது மாவட்ட கலெக்டரின் தன்னிறைவு திட்ட நிதியில் இருந்து ரூ.58 லட்சத்து 30 ஆயிரமும், கோயில் நிதியில் இருந்து ரூ.29 லட்சத்து 20 ஆயிரமும் என மொத்தம் ரூ.87.5 லட்சம் மதிப்பில் சண்முக விலாசம் மண்டபம் முன்புறம் இருந்து மூவர் சமாது வரை 20 அடி அகலத்தில் 380 மீட்டர் நீளத்தில் கான்கிரீட் நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் பார்வையிட்டார். அவருடன் கோயில் முதுநிலை கணக்கு அலுவலர் ராஜேந்திரன், பொறியாளர்கள் முருகன், பூதலிங்கம், சந்தானகிருஷ்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வடிவேல், முன்னாள் கவுன்சிலர் பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.