பதிவு செய்த நாள்
24
டிச
2013
11:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு, கிழக்கு சந்திப்பு மூலைவிட்டம் மதில்சுவரில், விரிசல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் சுற்றுச்சுவரில், கடந்த வாரம் காரை பெயர்ந்து விழுந்தது. இதில், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 6ம் நுாற்றாண்டில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலின் மதில் சுவரில், ஒருபுறம் விரிசல் ஏற்பட்டுள்ளது. வடக்கு மூலையில் உள்ள மதில் சுவரில், ஓராண்டுக்கு முன் அரச மரம் முளைத்து, அதன் வேர் பாதிப்பில், சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சுற்றுச்சுவரில் முளைத்திருந்த செடிகள் அகற்றப்பட்டன. எனினும், வடக்கு - கிழக்கு சந்திப்புப் பகுதியில் உள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுகுறித்து, கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், “விரைவில் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.