பதிவு செய்த நாள்
24
டிச
2013
11:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி, படித் திருவிழாவும், ஜனவரி மாதம், 1ம் தேதி, புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், வரும், டிசம்பர், 31ம் தேதி, படித் திருவிழா நடக்கிறது. ஆண்டுக்கு, 365 நாட்கள் என்று குறிக்கும் வகையில், திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படித் திருவிழாவான, 31ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி படிபூஜை செய்யப்படும். அதை தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிப்படுவர். இதுதவிர, பெண் பக்தர்கள், 365 படிகளுக்கும் மஞ்சள் பூசியும் குங்குமம் வைத்து வழிபடுவர். மேலும், திருத்தணி நகரின் முக்கிய பகுதிகளில், வெளியூர்களில் இருந்து வரும் பஜனை குழுவினரால், இரவு முழுவதும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறும். நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும். மறுநாள், (ஜன.1ம் தேதி) புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கிறது. படித் திருவிழா மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.