சபரிமலை: சபரிமலையில் மண்டலபூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சன்னிதானத்தில் மட்டும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 2110 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலையல் மண்டல பூஜை நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி நாளை மாலை சன்னிதானம் வந்து சேரும். மண்டலபூஜைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இதனை கேரள போலீஸ் டி.ஜி.பி., பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 19 துணை கமிஷனர், டி.எஸ்.பி.க்கள், 32 இன்ஸ்பெக்டர்கள், 118 எஸ்.ஐ.க்கள், 1320 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை சன்னிதானம் 19 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாகும் போது அதை கட்டுப்படுத்த 155 மத்திய ரிசர்வ் அதிரடி படையினரும், 54 தேசிய பேரிடர் தடுப்பு படையை சேர்ந்த போலீசாரும் பணியில் உள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 32, கர்நாடகாவிலிருந்து 55, ஆந்திராவிலிருந்து 32 போலீசார் இங்கு வந்துள்ளனர். இவர்களுடன் கேரளாவின் ரகசிய போலீசாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு கூட்டம் வந்தாலும் நிதானமாக அவர்களைகட்டுப்படுத்தி பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்க செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பம்பையிலும் இதுபோன்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், மணல்பரப்பில் பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பவும் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.