பழுதடைந்த நடராஜர் தேரை உடனே புதுப்பிக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2013 11:12
சிதம்பரம்: சிதம்பரத்தில் பழுதாகியுள்ள நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிஅம்மன் தேரை பச்சையப்பா அறக்கட்டளை புதுப்பிக்கும் பணியில் ஈடுப்பட வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக் குழு கோரிக்கை வைத்துள்ளது. அமைப்பின் தலைவர் செங்குட்டுவன், பச்சையப்பா அறக்கட்டளைக்கு அனுப்பியுள்ள கடிதம்: சிதம்பரம் நடராஜர் கோவில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தேர்களை சென்னை பச்சையப்பா அறக்கட்டளை பராமரித்து வருகிறது. இந்த இரு தேர்களும் தற்போது பழுதடைந்துள்ளது. சிவகாமசுந்தரி தேர் பிரிக்கப்பட்டு அதற்குரிய மரங்கள், தடவாளங்கள் வாங்கப்பட்டும் நான்கு மாதங்களாக எந்தப் பணியும் நடக்கவில்லை. பழுதடைந்த நிலையில் உள்ள நடராஜர் தேரைப் புதுப்பிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள், பச்சையப்பா அறக்கட்டளையிடமும், கோவில் பொது தீட்சிதர்களிடமும் பல ஆண்டுகளாக தெரிவித்துள்ளனர். ஆனால் தேர் சீரமைக்கவில்லை. இந்த ஆண்டு மார்கழி ஆரூத்ரா தரிசனம் தேரோட்டத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தேர் காலை 8.30 மணிக்குத் துவங்கி 11.15 மணிக்கு தேர் நிலைக்குவந்து நின்றது. அதனால் சிதம்பரம் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் தேரோட்டத்தைப் பார்க்க முடியாமல் போனது. பழுதடைந்த நிலையில் இருந்த தேர், இயக்குவது எப்படி என கலெக்டர் கிர்லோஷ்குமார், சப் கலெக்டர் அரவிந்த், டி.எஸ்.பி., ராஜாராம், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் பல முறை கூடி பேசினர். இதில் பழுது நீக்கம் செய்து தேர் ஓட்ட வேண்டும் என அதிகாரிகள் முடிவு எடுத்தனர். தேரைப் பராமரிக்கும் பச்சையப்பா அறக்கட்டளை, தேர்களைப் பழுது நீக்கி கொடுக்காமல் இருந்ததால் அனைவருக்கும் அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது. பச்சையப்பா அறக்கட்டளை நடராஜர் கோவில் தேர் புதுப்பிக்கும் பணியை வரும் ஜனவரி 20ம் தேதிக்குள் துவக்க வேண்டும். இல்லையெனில் 21ம் தேதி முதல் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் சென்னை பச்சையப்பா அறக்கட்டளை அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.