பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், ராஜராஜன் கோபுர விரிசலை சீரமைக்க வசதியாக, பிரதான தூண் வலிமையை அளவிடும் பணியில் தொல்லியல்துறை ஈடுபட்டுள்ளது. தஞ்சையில், ராஜராஜன் கட்டிய பெரியகோவில், 1,000 ஆண்டுகளை கடந்து நிற்கிறது. பெரியகோவிலுக்கு, மூன்று நுழைவாயில்களும், கோபுரங்கள் அடுத்தடுத்து உள்ளன. கோவிலுக்குள் நுழையும்போது, முதலில் மாராட்டியர் கட்டிய சிறிய கோபுரம் காணப்படும். தொடர்ந்து, கேரளாந்தகன் கோபுரம், ஐந்து அடுக்குகளுடன் உள்ளது. மூன்றாவதாக, ராஜராஜன் பெயரில் அமைந்த கோபுரம் உள்ளது. இதில், ராஜராஜன் கோபுரத்தின் மேற்புரத்தில் விரிசல் விட்டுள்ளது. மழைக்காலத்தில் விரிசல் வழியாக, தண்ணீர் சென்று, கோபுரத்தின் ஸ்திர தன்மையை பாதித்தது. இதையடுத்து, கோபுரத்தை அகற்றாமல், இப்போதுள்ள நிலையிலேயே, பராமரிப்பு பணியை மேற்கொள்வது குறித்து, இந்திய தொல்லியல்துறை தென்மண்டல இயக்குனர் நரசிம்மன் தலைமையில், சென்னை வட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரி உள்ளிட்ட குழுவினர், கடந்த நவ., 20ல், ஆய்வு நடத்தினர். ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி துவங்கப்படும் என, கூறினர். சீரமைப்பு பணிக்கு, முதற்கட்டமாக, கோபுரத்தின் பிரதான தூண் நிலை, அதை பலப்படுத்தும் முறை குறித்து, தொல்லியல்துறை சர்வேயர்கள் மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளனர்.
தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரியகோவிலில் ராஜராஜன் கோபுரத்தை சீரமைக்கும் பணி இன்னும் துவங்கப்படவில்லை. அதற்கு முன்னோட்டமாக, பெரிய தூண் ஒன்றை அடிப்படையாக வைத்து, அதன் மீது கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதையும், தூணை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்தும் எடையை அளந்து, மதிப்பீடு செய்யும் பணியில் சர்வேயர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணி, 20 நாட்களுக்கு மேல் நடக்கும். அதன்பின், குழுவினர் ஆலோசித்து, பின் சீரமைப்பு பணி துவங்கும், இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.