பதிவு செய்த நாள்
26
டிச
2013
10:12
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காசிக்கு அடுத்தபடியாக, தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் காலபைரவருக்கு தனியாக கோவில் உள்ளது. மாதந்தோறும், இக்கோவிலில் நடக்கும் தேய்பிறை அஷ்டமியில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த தேய்பிறை அஷ்டமியில், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, விபூதி அலங்காரத்தில் காலபைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேண்டுதல் நிறைவேற எலுமிச்சை பழம், தேங்காய், சாம்பல் பூசணி ஆகியவற்றில் தீபம் ஏற்றி, கால பைரவரை பக்தர்கள் வழிபட்டனர். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, காலபைரவரை தரிசித்தனர்.