திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தங்கத்தேர் நிர்மாண பணிகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2013 12:12
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தங்கத்தேர் நிர்மாண பணிகளை பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் செய்து முடிப்பது என அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவுசெய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசிப்பெருந்திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவின் ஒன்பதாவது நாளில் தேரோட்டம் நடைபெறும். தேர் திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் தொட்டு இழுப்பது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக அன்றையதினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே முத்துமாரியம்மன் தங்கத்தேரில் வலம் வருவதற்காக தங்கத்தேர் அமைக்கவேண்டும் என இந்து அறநிலையத்துறையிடம் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட தங்கத்தேர் கோரிக்கைக்கு முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது அனுமதி கிடைத்தது. இதையடுத்து பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் ஒரு கோடி ரூபாய் செலவில் தங்கத் தேருக்கான நிர்மாண பணிகள் துவங்கியது. முழுக்க, முழுக்க தேக்கு மரத்தை கொண்டு, 12 அடி உயரத்தில் கலைநயமிக்க மரத்தேர் நிர்மாணிக்கப்பட்டது. பணிகள் முழுமையடைந்ததும் மரத்தேர் மீது செப்பு தகடுகள் பதிக்கப்பட்டு வெள்ளோட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கத் தேரை பாதுகாக்கும் விதமாக கோவிலின் அருகில் பாதுகாப்பு அறையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தேர் மீது தங்கத்தகடுகள் பதிக்க தேவையான தங்கத்தை வழங்குமாறு அறக்கட்டளை சார்பில் மீண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. நான்கு ஆண்டு கடந்தும் தங்கத்தகடு வழங்க அரசு முன்வராததால் ஏமாற்றமடைந்துள்ள அறக்கட்டளையினர், பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் ஆகம விதிகளின் அடிப்படையில் தங்கத்தேர் நிர்மாண பணிகளை முழுமையாக செய்து முடிப்பதெனவும், இதற்காக அரசிடமிருந்து அனுமதி பெறுவதெனவும் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் நடைபெறவுள்ள மாசிப் பெருந்திருவிழாவில் தங்கத்தேரில் முத்துமாரியம்மன் வீதியுலா வரும் விதமாக தங்கத்தகடு பதிக்கும் பணியினை விரைவில் துவக்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.