பதிவு செய்த நாள்
28
டிச
2013
11:12
குறிச்சி: குறிச்சியில், அரவான் பண்டிகை முன்னிட்டு, திருவீதி உலா நேற்று நடந்தது. குறிச்சியில் அரவான் திருவிழா கடந்த 17ம் தேதி, முதுப்பர் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, ஊர் எல்லை கட்டுதல், அரவானுக்கு உயிர் பிடித்தல், கம்பம் நட்டு பூச்சாட்டுதல் உள்ளிட்டவை நடந்தன. இதையடுத்து, 24ம் தேதி, பெருமாள் கோவிலில் அரவான் மற்றும் அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடந்தன.25ம் தேதி, அரவான் அலங்கரிக்கப்பட்டு உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலிலிருந்து அரவான் எழுந்தருளுதலும் நடந்தன. தொடர்ந்து, அரவான், குறிச்சி குளக்கரை வினாயகர் கோவிலில் தீர்த்தமாடி, சிறப்பு வழிபாட்டுடன் புறப்பட்டார். இதையடுத்து, அரவான் - பொங்கியம்மாள் திருமணம் நடந்தது.நேற்று முன்தினம் குளக்கரை கற்பக வினாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு, அரவான் திருவீதி உலா புறப்பட்டது. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் உரிய மேடையில் வைக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி ரோடு வழியாக வீதியுலா, சுந்தராபுரம் அரவான் மேடையை வந்தடைந்தது. அங்கு, பல்வேறு சமூகத்தாரின் பூஜைகளுக்கு பின், மீண்டும் பெருமாள் கோவில் நோக்கி, வீதியுலா சென்றது. திரளானோர், அரவானையும், பொங்கியம்மனையும் வழிபட்டுச் சென்றனர்.பெருமாள் கோவில் முன், கிருஷ்ணர், அரவானுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, ஒவ்வொரு மேடையாக சென்று, இறுதியாக கள மேடைக்கு சென்ற, அரவான் பலி கொடுக்கப்பட்டார். திருவிழா முன்னிட்டு, பல்வேறு அமைப்புகள் சார்பில், இசை நிகழ்ச்சிகள் நடந்தன. வீதியுலா முன்னிட்டு, கோவை - பொள்ளாச்சி ரோட்டில், வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.