பதிவு செய்த நாள்
04
ஜன
2014
11:01
பழநி: பழநி கோயில் முடி காணிக்கை நிலையத்தில், கூடுதல் கட்டணம், முறைகேடுகள் குறித்த, அறிவிப்பு பலகை வைப்பதற்கு, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழநி கோயில் சார்பில், செயல்படும் முடிக்காணிக்கை நிலையங்களில், கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.5 முடியெடுக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கட்டணத்தொகையில் ரூ. 5 ஊதியமாக தருகின்றனர். இந்நிலையில், முடிகாணிக்கை நிலையத்தில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, கோயில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.இதன்காரணமாக, நேற்று, முடிகாணிக்கை கட்டணவிபரம், மற்றும் புகார்கள் குறித்து, பக்தர்கள் தெரிவிப்பதற்கு வசதியாக, அறிவிப்பு பலகை தயார் செய்து, முடிகாணிக்கை நிலையத்தில், கோயில் அதிகாரிகள் வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு, தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு மாத ஊதியம் நிர்ணயம் செய்து, வழங்க வேண்டும், என கோரிக்கை வைத்தனர்.இதனால், அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த, உதவி ஆணையர் மேனகா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிசென்றார்.