பதிவு செய்த நாள்
09
ஜன
2014
10:01
போகி பண்டிகையின் போது, டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால், பெரும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், காற்றில் அதிகளவில் கலக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளன்று, போகி பண்டிகை, தமிழர்களால் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.ஆண்டு முழுவதும் பயன்படுத்திய பொருட்களை, வீட்டு வாசலில் குவித்து, போகியன்று காலையில் எரிக்கும் வழக்கம், பல்லாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில், பழைய ஆடைகள், பாய்கள், துடைப்பம் போன்றவற்றை தீ வைத்து எரித்தனர். இதனால், சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் மாசு ஏற்படவில்லை. சமீபகாலமாக, டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், தர்மாகோல், பாலியஸ்டர் துணிகள் போன்றவற்றை எரிக்கின்ற ஆபத்தான கலாசாரம் தலை தூக்கி உள்ளது. இவற்றை எரிப்பதால், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, டை ஆக்சின், கேட்மியம், டொலுவின், பென்சின், ஈயம், சைலின், பியூரான் போன்ற ரசாயனங்கள் காற்றில் கலக்கின்றன. இதனால், காற்று நஞ்சாக மாறி விடுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் ரசாயனங்கள் கலந்த நச்சுப் புகைக்கு இணையாக, சமீப காலமாக, போகியன்று நச்சுகள் வெளியாகி காற்றில் கலப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிகளவில் வெளியாகும் மிதவை துகள்களும், சுற்றுச்சூழலுக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. உலகத்துக்கு பெரும் தலைவலியாக எழுந்துள்ள, "பூமி வெப்பமயமாதல் பிரச்னைக்கு, முக்கிய காரணமாக திகழ்வது நைட்ரஜன் டை ஆக்சைடு, போகி சீசனில் அதிகளவில் வெளியாகிறது. இந்த ரசாயனம், அமில மழைக்கும் காரணமாக உள்ளது.போகி கொண்டாடப்படும் ஜனவரி மாதம், குளிர்காலம் என்பதால், பனிப் பொழிவுடன், காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருப்பது வழக்கம். இதனால், பூமியின் மேற்பரப்பில் வெப்பம் குறைந்து காணப்படும்.
இதன் எதிரொலியாக, பூமியின் மீது குடையை கவிழ்த்ததுபோன்ற சூழல், இயற்கையாகவே காற்று மண்டலத்தில் ஏற்படும். எரிக்கப்படும் பொருட்களில் இருந்து வெளியாகும் ரசாயனங்கள், மிதவை துகள்கள், புகை போன்றவை எளிதில் மேலே செல்லாமல், வீடுகளை சூழ்ந்து கொண்டிருக்கும். இதனால், பாதிப்பு இரண்டு மடங்காகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் கூறும்போது, "போகி பண்டிகையின்போது, பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப் போன்ற பொருட்களை எரிப்பதால், வெளியாகும் சில ரசாயனங்கள், புற்றுநோயை உருவாக்கும் அபாயம் கொண்டவை. மேலும், நரம்பு மண்டலம் பாதிப்பு, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள், முதியோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.அபாயம் விளைவிக்கும் பொருட்களை எரிப்பதை தவிர்த்து, புகையில்லா போகியை கொண்டாடுவோம்;விழிப்புடன் இருந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க, அனைவரும் கைகோர்ப்போம் என்றார்.
காற்றில் கலக்கும் மாசுஅதிர்ச்சி ரிப்போர்ட்: போகி பண்டிகையின்போது, காற்று மாசடைவது தொடர்பாக, புதுச்சேரி அரசின், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.காற்றில் மிதக்கும் துகள்களின் அளவு, ஒரு கன மீட்டருக்கு, 100 மைக்ரோ கிராம் வரை இருக்கலாம் என, தேசிய அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில், கடந்த போகியின்போது, ஒரு கன மீட்டருக்கு, 168 மைக்ரோ கிராம் என்ற அளவில், மிதவை துகள்கள் காற்றில் கலந்திருந்தது தெரிய வந்தது. இது, சராசரியைவிட, 75 சதவீதம் அதிகமாகும்.நைட்ரஜன் டை ஆக்சைட், அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தாலும், சராசரி நாட்களில் இருக்கும் அளவைவிட, ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், சல்பர் டை ஆக்சைட் அளவு, சராசரியைவிட, மூன்று மடங்கு அதிகமாக காற்றில் கலந்திருந்தது குறிப்பிடத்தக்கது.-நமது சிறப்பு நிருபர்-