பதிவு செய்த நாள்
10
ஜன
2014
11:01
வேலூர்: அறநிலையத்துறையினர் அலட்சியப் போக்கால், கோவில் உண்டியலில் இருந்த காணிக்கை, 55,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லரித்து நாசமாகி இருந்தது. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, பெரியாகுப்பத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், மாசி மாத திருவிழாவை, 19 கிராம மக்கள் சேர்ந்து நடத்துவர். ஆண்டு தோறும் நடக்கும் கங்கையம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக் கடன் செலுத்துவர்.கடந்த, 2012ம் ஆண்டு பிப்ரவரியில் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. அதன் பின், உண்டியல் திறக்கப்படாததால், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் நிரம்பி வழிவந்தது.கோவிலில் உண்டியலை திறந்து, அதில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்கும்படி, ஹிந்து சமய அறநிலைத்துறையினருக்கு, பக்தர்கள் சார்பில், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் உண்டியலை திறக்காமல் மெத்தனமாக இருந்தனர். இதனால், உண்டியலை திறந்து பணத்தை எண்ணும்படி, தமிழக முதல்வருக்கு, பக்தர்கள் பேக்ஸ் அனுப்பினர்.இதையடுத்து, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் தலைமையில், ஆய்வாளர் துரைசாமி மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில், நேற்று, கோவில் உண்டியல் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அப்போது, 55,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்குள் செல்லரித்து, பல துண்டுகளாகி இருந்தது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் உண்டியலில், ஒரு லட்சத்து, 75,000 ரூபாய் இருந்தது. இதில், 55 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லரித்து விட்டது. ஆட்கள் பற்றாக்குறையாலும், ஒரே செயல் அலுவலர் பல கோயில்களுக்கு பொறுப்பாளராக இருப்பதாலும், குறிப்பிட்ட நேரத்தில் உண்டியலை திறக்க முடியவில்லை. இவ்வாறு கூறினார்.இது குறித்து பக்தர்கள் சபா தலைவர் ஞான தேசிகன் கூறியது:கோவில் உண்டியலை, மூன்று மாதத்துக்கு, ஒருமுறை திறக்க வேண்டும். பல முறை தகவல் கொடுத்தும், அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் திறக்கவில்லை. இதனால், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் வீணாகியுள்ளது. அலட்சிம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.