வைகுண்ட ஏகாதசியான இன்று, இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து ரங்கநாதர்அருள் பெறுவோம்.
* காவிரி நதியின் நடுவில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டவரே! ஏழு திருமதில்களால் சூழப்பட்டவரே! தாமரை மொட்டு போன்ற அழகான விமானம் கொண்டவரே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவரே! கருணைக் கடலாகத் திகழ்பவரே! ரங்கராஜரே! உம்மைப் போற்றுகிறேன். * ஸ்ரீதேவி, பூதேவியரால்வணங்கப்படுபவரே! இடக்கையை இடுப்பில் வைத்தபடி துயில்பவரே! கஸ்தூரி மணம் கமழும் "ஊர்த்துவ புண்ட்ரம் என்னும் திலகத்தை நெற்றியில் கொண்டவரே! காது வரை நீண்டிருக்கும் பெரிய அழகான தாமரைக் கண்களை உடையவரே! தரிசிக்கும் பக்தர்களின்உள்ளங்களைக் கொள்ளை கொள்பவரே! தாமரை மலர் போன்ற திருமுகம் கொண்டவரே! சம்சார சாகரத்திலிருந்து உயிர்களைக் காப்பவரே! உம்மைத் தரிசித்த பாக்கியத்தைத் தந்தருள வேண்டும். * மது, கைடபர் என்னும் அரக்கர்களை அழித்தவரே! இந்திர நீலமணி போல பிரகாசம் மிக்கவரே! நாராயணா, மாதவா, கேசவா, ஹரி, முகுந்தா, முராரி, கோவிந்தா என்னும் திருநாமங்களால் போற்றப்படுபவரே! ஸ்ரீரங்கப் பட்டணத்தை அலங்கரிப்பவரே! நீராடுவோரின் பாவம் போக்கும் காவிரிக் கரையில் நித்யவாசம் செய்பவரே! புண்ணியம் மிக்கவரே! கீர்த்தி நிறைந்தவரே! எப்போதும் எங்களைக் காத்தருள வேண்டும். * லட்சுமியின் விலாசமாகத் திகழும் ஸ்ரீரங்க நகரில் வாழ்பவரே! வேத கோஷம் கேட்டபடி துயில்பவரே! மோட்சத்தை அருள்பவரே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவரே! மங்கள குணம் கொண்டவரே! தேவியர் வருடுகின்ற திருப்பாதங்களை உடையவரே! உலக உயிர்களைக் காப்பவரே! பிரம்மதேவரால் பூஜிக்கப்பட்டவரே! செல்வ வளம் தருபவரே! எங்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றி வைப்பீராக.