பதிவு செய்த நாள்
15
ஜன
2014
10:01
சென்னை: காணும் பொங்கலையொட்டி, பொழுதுபோக்கு பூங்காக்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, போலீசாருக்கு, கமிஷனர் உத்தர விட்டு உள்ளார். அதற்காக, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, நாளை மாட்டுப்பொங்கல், மறுநாள், காணும் பொங்கல் என தொடர் பண்டிகைகள், வருகின்றன. காணும்பொங்கல் அன்று, மெரீனா, எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரைகள், முட்டுக்காடு, சிறுவர் பூங்கா, வள்ளுவர் கோட்டம் மற்றும், கிழக்கு கடற்கரை சாலை, தாம்பரம், பூந்தமல்லியை அடுத்துள்ள பொழுது போக்கு பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். சென்னையை அடுத்த, புறநகர் மற்றும் கிராமங்களில் இருந்து, மாட்டு வண்டியில் சொந்தபந்தங்களுடன் வந்து, காணும் பொங்கலை கொண்டாடுவர். இதனால், முக்கிய சாலைகளில் காணும் பொங்கலை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதை அடுத்து, சென்னை மாநகர போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில், வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதே போல், கடற்கரையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மப்டி போலீசார் அதிகளவில் பணியமர்த்தப்படுகின்றனர். இது தவிர, கண்காணிப்பு கோபுரங்கள், ரகசிய கண் காணிப்பு கேமராக்கள் மூலமும், போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடற்கரையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீச் பக்கீஸ் வாகனம், குதிரையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்கரைகள் தவிர, மற்ற பகுதிகளிலும், போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, பொழுது போக்கு பூங்காக்களில், பொதுமக்கள் அதிகளவில் கூடுவர் என்பதால், அங்குள்ள, பொழுதுபோக்கு அம்சங்களின் பாதுகாப்பு வசதி கள் குறித்து, ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னை நகர் முழுவதும், காணும் பொங்கலுக்காக, ஐந்து கூடுதல் கமிஷனர்கள், ஆறு, இணை கமிஷனர்கள், 21 துணை கமிஷனர்கள் என, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.