பதிவு செய்த நாள்
15
ஜன
2014
10:01
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழா களை கட்டியுள்ளது. பொங்கல் வைத்தும், கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியும் விழாவை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதி விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளது. இப்பகுதிகளில், இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவான தை பொங்கல் திருநாள் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் இதை வரவேற்கும் வகையில், மக்கள் தயாராகினர். நேற்றுமுன்தினமே கடைகளில், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வாங்கவும்; புத்தாடை வாங்கவும் ஆர்வம் காட்டியதால், மக்கள் கூட்டம் அலைமோதியது. நகரம் மற்றும் கிராம பகுதிகளில், தை முதல்நாளை வரவேற்கும் விதமாக வீடுகளில் நேற்றுமுன்தினம் வேப்பிலை, பூளைப்பூ , ஆவாரம் ஆகியவை கொண்டு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, நேற்று வீடுகளின் முன்பு, மாக்கோலமிட்டு, கரும்பு, மஞ்சள் ஆகியவற்றுடன், புதுப்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின், அருகிலுள்ள வீடுகளுக்கு பொங்கலை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். பொள்ளாச்சி கிராமப்புற பகுதிகளில், போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உழவுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகள், விவசாய நிலங்களுக்கு நன்றி சொல்லும் விழாவாக, கிராமங்களில் இன்று பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசும் பணி மேற்கொண்டனர். பட்டி பொங்கல் விழாவை கொண்டாட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கிணத்துக்கடவு: தைப்பொங்கலை ஒட்டி, கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், அதிகாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பு யாகசாலை பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, புனித நீரை ஊற்றி சிவலோகநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு, தீபாராதனை காட்டப்பட்டது. பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காலை 5.00 மணியளவில் வேலாயுதசாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடந்தன. வலம்புரி விநாயகர், செல்வகணபதி விநாயகர், அய்யாசாமி போன்ற கோவில்களில் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. வீடுகளில், தைப்பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் வீட்டு வாசல் முன்பு பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டனர்.
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், நேற்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேளாண் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வீடுகளில், பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்தினர். மேலும், உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், சிறப்பு வழிபாடும் நடந்தது. மார்கழி மாத நிறைவை கொண்டாடும் வகையில், வீடுகளில் கோலமிட்டு, பூக்களால், அலங்கரித்து, வழிபாடு நடத்தினர்.
மாவிலை, வேப்பிலை, பூளப்பூ, ஆவாரம் பூ ஆகியவை அடங்கிய இலைக்கொத்துகளை கொண்டு வீடுகளில் காப்பு கட்டினர். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த விநாயகர் மற்றும் சவுரிராஜ பெருமாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர். மாரியம்மன் கோவில், கொழுமம் காசி விஸ்வநாதர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இன்று 15 ம் தேதி மாட்டுப்பொங்கலையொட்டி, கிராமங்களில் பட்டிப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கால்நடைகளுக்காக நடத்தப்படும் இப்பொங்கல் நாளையொட்டி, கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. விளைநிலங்களில், சிறிய நீர் நிலை அமைத்து, கரும்பு, மஞ்சள் தோரணங்களால் அலங்கரித்து, அவற்றிற்கு பொங்கல் வைக்கப்படும். தொடர்ந்து, தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு வழிபாடுகளை விவசாயிகள் நடத்துகின்றனர். பட்டிப்பொங்கல் எனப்படும் இந்த பொங்கல் கிராமங்களில், உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பொங்கலையொட்டி, பல்வேறு பகுதிகளில், சிறப்பு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
கோவில்களில் சிறப்பு பூஜை: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், தைப்பொங்கலையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் இடம் பெற்றன. தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கோவில்களில், பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.