வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள ஷேக்கல்முடி, புதுக்காடு மாரியம்மன் திருக்கோவில் பொங்கல்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் பொதுமேலாளர் நாகராஜ் தலைமையில், துணைமேலாளர் அறிவளகன், பீல்டு ஆபீசர் ரவிசந்திரன் ஆகியோர் திருக்கொடியேற்றினர். விழாவில் நேற்று காலை பக்தர்கள் பூச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். ஈட்டியார் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை 6.00 மணிக்கு நடந்த திருவிழாவில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. காலை 8.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பகல் 12.00 மணிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து கரகாட்டமும் இடம்பெற்றன. சோலையார் முதல் பிரிவு மாரியம்மன், முனீஸ்வரன் கோவில், கல்லார் எஸ்டேட் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தோணிமுடி எஸ்டேட் மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவில் நடந்த பொங்கல்திருவிழாவில் காலை 6.00 மணிக்கு அபிஷேக பூஜையும், 11.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதே போல் வெள்ளமலை எஸ்டேட், உருளிக்கல் எஸ்டேட், பன்னிமேடு, மளுக்கப்பாறை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் கோவில்களில் பொங்கல்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எஸ்டேட் பகுதிகளில் கரகாட்டத்துடன் பொங்கல்திருவிழா கொண்டாடப்பட்டதை தொடர்ந்து பொங்கல் பண்டிகை "களை கட்டியது.