சூரியகுல மன்னன் பகீரதனின் நல்லாட்சிக்கு இடையூறு செய்யும் விதத்தில், கோரன் என்ற அரக்கன் போருக்கு வந்தான். செய்வதறியாது திகைத்த பகீரதன், தன் மனைவி மக்களோடு காட்டில் ஒளிந்து கொண்டான். அங்கு தவம் செய்த பிருகு முனிவரைக் கண்டான். அவரிடம் நடந்ததைச் சொல்லி வருந்தினான். பிருகுவின் வழிகாட்டுதலின்படி, முருகனைக் குறித்து வெள்ளிக்கிழமையில் சுக்கிரவார விரதம் இருக்கத் தொடங்கினான். முருகப்பெருமான், கோரனை அழித்து, பகீரதனுக்கு மீண்டும் அரசாட்சியை அளித்தார். இழந்ததை மீட்கவும், எதிரிபயம் நீங்கவும் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது நல்லது. இந்த ஆண்டு தைப்பூசம், வெள்ளியன்று வருவது சிறப்பு.