சிவபார்வதிக்கு நடுவில் முருகன் வீற்றிருப்பதை சோமாஸ்கந்தர் என்று குறிப்பிடுவர். இந்த கோலத்திற்கு சச்சிதானந்தம் என்றும் பெயருண்டு. சச்சிதானந்தம் என்பது சத்+ சித்+ ஆனந்தம் என்று பிரியும். இதில் சத் என்பது சிவனையும், சித் என்பது பார்வதியையும், ஆனந்தம் என்பது முருகனையும் குறிக்கும். கைலாயத்தில் இருந்த முருகன், கனிக்காக மனம் வருந்தி பெற்றோரைப் பிரிந்தபோது, அவர்களின் ஆனந்தம் அகன்றதை உணர்ந்தனர். சிவபார்வதி முருகனைப் பின் தொடர்ந்து இங்கு வந்து, எங்கள் கண்மணியே! வேதம் போற்றும் ஞான பண்டிதனே! ஞானப்பழமாகத் திகழ்பவனே! உனக்கு வேறொரு பழம் தேவையா? எனச் சொல்லி சாந்தப்படுத்தினர். இறைவனே பழம் நீ என்று அழைத்ததால் இங்குள்ள முருகன் பழநி என்ற திருநாமம் பெற்றார். இவரை வழிபடும் அடியவர்க்கு என்றென்றும் ஆனந்தப்புன்னகை நிலைத்திருக்கும்.