பதிவு செய்த நாள்
16
ஜன
2014
10:01
உடுமலை: பொங்கலன்று பிறக்கும் காளைக்கன்றுகளை, தங்கள் கிராம தெய்வமாக கருதி, அவற்றிற்கு பொங்கலிட்டு,வழிபடும் பாரம்பரியம், உடுமலை கிராமங்களில், தொடர்கிறது. பொங்கலன்று மாடுகள் ஈன்றெடுக்கும் காளை கன்றுகள் இறைவனுக்கு சொந்தமானது என கிராம மக்களால் கருதப்பட்டு, கோவில்களுக்கு தானமாக அளிக்கப்படுகிறது. இந்த கன்றுகள் இறைவனுக்கு உரியதாக கருதப்பட்டு, கிராம மக்கள் அவற்றை தத்தெடுத்து, சலங்கை மாடுகளாக மாற்றுகின்றனர். ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் பகுதிக்கு ஒரு சலங்கை மாட்டை தேர்ந்தெடுத்து, அவற்றை பாதுகாத்து வளர்க்கின்றனர். இவ்வகை கன்றுகள் இசைக்கு தகுந்தவாறு ஆடி செல்ல தயார்படுத்தப்படுகிறது. மார்கழி மாத இரவுகளில் ஊரின் பொது இடத்தில் "உறுமி இசை கலைஞர் தலைமையில், தேவராட்ட குழுவினர் இந்த கன்றுகளை தயார்படுத்துகின்றனர்.
ஆட்டக்காரர் தனது கைகளில் இரண்டு நீளமான குச்சிகளை கையில் ஏந்தி உறுமி இசைக்கேற்ப காளையின் முன்பு ஆடிச்செல்வார்கள். ஆட்டக்காரரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு, தனது தலையை அசைத்து அவர்களை பின்தொடர்ந்து, காளைகள் செல்லும். ஆட்டக்காரர்கள் மஞ்சள் நிற துணியை தலையில் கட்டி, இரு குச்சிகளை லாவகமாக இசைக்கேற்ப ஆட்டி செல்வது, பார்ப்பவர்களின் மனதை கொள்ளைகொள்ளும்.மார்கழி மாத இரவு முழுவதும் சலங்கை மாடுகள் ஆட்டம் கிராமங்களில் நடக்கும். சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவிற்காக சுற்றுப்பகுதியை சேர்ந்த அனைத்து கிராம சலங்கை மாடுகளும் அழைத்து வருவர். அதே போல் தேவனூர்புதூர் ஆண்டியூர் கிராமத்தில் உள்ள சல்லிவீரய்யன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த சலங்கை மாடுகள் அழைத்து வருவர். திருவிழாவில் சலங்கை மாடுகள் ஆட்டம் முடிவுற்ற பின்னர், கிராமத்தில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பொங்கல் வைத்து வழிபாடு நடக்கும். இறைவனுக்கு உரியதாக கருதப்படும் சலங்கை மாடு ஆட்டம், கிராமங்களில் இன்றும் பாரம்பரியமாக தொடர்கிறது.