பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
ஈரோடு: தைப்பூசத்தை முன்னிட்டு, வள்ளலாரின் ஜோதி தரிசன நிகழ்ச்சி ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு கோட்டை அப்பர்சாமி மடத்தில், மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், காலை, மாலை வேளைகளில் அகவல் பாராயணம், ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசன வழிபாடும் நடந்து வருகிறது. தைப்பூச தினமான நாளை (17ம் தேதி), சமரச சுத்த சன்மார்க்க நெறியை உலகுக்கு போதித்த வள்ளலார், ஜோதியில் ஐக்கியமான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தை மாத பூச நட்சத்திர தினமான நாளை, சங்க வளாகத்தில் காலை, மாலை, ஆறு மணிக்கு அகவல் பாராயணம் நடக்கிறது. பின்னர் காலை, மாலை இரு வேளைகளிலும், ஏழு திரைகளை நீக்கி, ஜோதி தரிசனம், பக்தர்களுக்கு காட்டப்படுகிறது. காலையில் ஜோதி தரிசன நிகழ்ச்சிக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சங்கத்தில் தினமும் காலையில் அகவல் பாராயணத்துக்குப்பின், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.