பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
திருச்சி: ஸ்ரீரங்கம் மேலூரில் வெளிநாட்டு பயணிகள் பாரம்பரிய முறையில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்.திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மேலூர் அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.இவர்களுக்கு மேலூர் கிழக்கு தெருவில், மேலூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தமிழ் பாரம்பரியப்படி மாலை அணிவித்து திலகமிட்டு வரவேற்றனர். பின்னர் அனைத்து பயணிகளும் மாட்டு வண்டியில் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மாட்டு வண்டியில் கலெக்டர் ஜெயஸ்ரீயும் பயணம் செய்தார்.பொங்கல் சுற்றுலா விழா நடந்த அய்யானார் கோவில் வளாகத்தில் கிராமத்து பெண்களுக்கு ரங்கோலி, கோலப்போட்டி நடத்தப்பட்டது. பெண்களின் வண்ணமிகு கோலங்களை கண்டு வெளிநாட்டினர் வியந்து பாராட்டினர்.தொடர்ந்து கோவிலில் கோ பூஜையும், 7 பானைகளில் சுற்றுலா பயணிகள் பங்கேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய நிகழ்ச்சியான கிளி ஜோதிடம், மருதாணி வைக்கும் நிகழ்ச்சி, ஸ்ரீரங்கம் பாலாலயா ரேவதி முத்துசாமி குழுவினரின் பரதநாட்டியம், மயிலாட்டம், பாம்பு நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.தஞ்சாவூர் ஏ.என்.பி., குழுவினரின் கிராம கலை நிகழ்ச்சிகள், கிராமத்தினர் பங்கேற்ற மயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், பானை உடைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. சிறந்த கோலமிட்ட பெண்களுக்கு பரிசும், வெளிநாட்டு பயணிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.மலேசியா பயணிகள் 5, இஸ்ரேல் பயணிகள் 24, சுவிட்சர்லாந்து பயணிகள் 6, லண்டன் பயணிகள் 6, ஜெர்மனி பயணிகள் 6, போலந்து பயணிகள் 2, ஃபிரான்ஸ் பயணிகள் 11, நியூசிலாந்து பயணிகள் 8, ஆஸ்திரேலியோ பயணிகள் 12, குரேசியா பயணிகள் 2 என மொத்தம் 82 பேர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் ராமமூர்த்தி, தோட்டக் கலை துணை இயக்குனர் சந்திரசேகர், ஸ்ரீரங்கம் தாசில்தார் பவானி, உதவி சுற்றுலா அலுவலர்கள் செல்வராஜ், பழனி, அன்சாரி, அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.