பதிவு செய்த நாள்
17
ஜன
2014
12:01
தொட்டியம்: திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான, ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மார்கழி மாத ஏகாதசி விழாவினை முன்னிட்டு ராப்பத்து, பகல் பத்து என, 21 நாட்கள் நடக்கும் திருவிழா, கடந்த முதல் தேதி கொடியேற்றத்துடன், தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் துவங்கியது. ஆழ்வார்கள் தினமும் பாரசுரங்கள் பாடிச்செல்ல, நாள்தோறும் நம்பெருமாளின் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வந்தது. பகல்பத்தின் நிறைவுநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் மோகனாவதாரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வைகுண்ட ஏகாதசி விழாவில், நேற்று காலை நம்பெருமாள் ஐந்து மணிக்கு சொர்க்கவாசல் வழியாக, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பரவச கோஷங்கள் எழுப்ப வெளியே வந்தார். தொடர்ந்து நம்பெருமான் ஆழ்வார்கள் பாரசுரம் பாடிவர, திருக்கோவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். பின் நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. விழாவினை முன்னிட்டு, ஸ்ரீவேம்பன் டிரஸ்டி மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை முதல் ராப்பத்து விழா நடக்க உள்ளது.