பதிவு செய்த நாள்
22
ஜன
2014
10:01
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில், தை உத்தரத்தை முன்னிட்டு, மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான நேற்று, வருஷாபிஷேகம் நடந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கோவில் கும்பாபிஷேகம் நடந்த தினத்திலும், மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்திலுமாக, ஆண்டுக்கு இரு முறை வருஷாபிஷேகம் நடக்கும். நேற்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான, தை உத்தரத்தில், வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, 4:30 மணிக்கு விஸ்ரூப தீபாரதணையும், முருகனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. தங்க கொடி மரம் அருகில், கும்ப கலசங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி, வள்ளி, தெய்வாணையுடன் தங்க மயில் வாகனத்தில், தனித்தனி சப்பரங்களில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.