பதிவு செய்த நாள்
30
ஜன
2014
11:01
ஆனைமலை: பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவங்கியது. கோவை மாவட்டம் ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவிற்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள், உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் வருகை தருவர். இந்த ஆண்டு குண்டம் திருவிழாவின், முதல் நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று(30ம் தேதி) காலை 8.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பிப்.12ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு மயான பூஜையும், மறுநாள் 13ம்தேதி காலை 8.00மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், அன்று மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து, பிப்.14ம்தேதி மாலை 6.30 மணிக்கு அம்மனின் சித்திரைத்தேர் வடம் பிடித்து, திருவீதிஉலா நடக்கிறது. அன்று இரவு 10.00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி, பக்தி இன்னிசை கச்சேரியுடன் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் பிப். 15ம்தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்குவர். பிப்.16ம் தேதி காலை 9.00 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், அன்று இரவு 8.00 மணிக்கு மகாமுனி பூஜையும் நடைபெறுகிறது. 17ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு மகா அபிசேகமும். அலங்கார பூஜையும் இடம்பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் அனிதா, விழா குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.