பதிவு செய்த நாள்
31
ஜன
2014
11:01
ஆனைமலை: மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பீடு செய்யப்படும், என கோவில் உதவி ஆணையர் அனிதா கூறினார். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின், கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும், தை மாதம் அமாவாசையை முன்னிட்டு நேற்று 1,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தை அமாவாசை தினமான நேற்று கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. வெளியூர் பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு 20க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. லை 8.30 மணிக்கு கொடிக்கட்டுதல் நிகழ்ச்சியை பார்க்க ஆயிரக்கணக்காண பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். கோவிலுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் ஒரே இடத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குண்டம் திருவிழாவில், பிப்.14ம் தேதி இரவு பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் வசதிக்காக 6 மொபைல் டாய்லெட்கள் வைக்கவும், குண்டம் பகுதியில் குடிநீர் வசதி செய்து தரவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று வழியில் போக்குவரத்து மாற்றிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு இம்முறை தீ காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ வசதிக்காக 2 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் உதவி ஆணையர் அனிதா கூறினார். பிப்.12ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு மயான பூஜையும்,மறுநாள் 13ம்தேதி காலை 8.00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனமும், அன்று மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது. இதை தொடர்ந்து, பிப்.14ம்தேதி மாலை 6.30 மணிக்கு அம்மனின் சித்திரைத்தேர் வடம் பிடித்து, திருவீதிஉலா நடக்கிறது. அன்று இரவு 10.00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி, பக்தி இன்னிசை கச்சேரியுடன் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் பிப்.15ம்தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து குண்டம் இறங்குவர். பிப். 16ம் தேதி காலை 9.00 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், அன்று இரவு 8.00 மணிக்கு மகாமுனி பூஜையும் நடைபெறுகிறது. 17ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு மகா அபிசேகமும், அலங்கார பூஜையும் நடைபெற உள்ளது.