பதிவு செய்த நாள்
08
பிப்
2014
10:02
மதுரை: திருவனந்தபுரம், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில், 40 லட்சம் பெண்கள் பங்கேற்பர் என, கோவில் நிர்வாகிகள், மதுரையில் தெரிவித்தனர். திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது: பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா, இன்று முதல் துவங்கி, 17ம் தேதி வரை, நடைபெற உள்ளது. முதல்நாள், அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்துவர். மாலை, 4:00 மணிக்கு, யானை விழா நடைபெறும். யானை மீது இருப்பவர்கள் குடைமாற்றம் செய்வர். வரும், 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு, பொங்கல் விழா நடைபெறும். பிற்பகல், 2:30 மணிக்கு, பொங்கல் நைவேத்யம் நடக்கிறது. பொங்கலின் போது, விமானத்தில் இருந்து பூ தூவி, தீர்த்தம் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் நிகழ்ச்சியில், கேரளா, தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்து, பெண்கள் மட்டுமே பங்கேற்பர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.