பதிவு செய்த நாள்
11
பிப்
2014
10:02
மதுரை: மதுரையில் நடந்த இசைவிழாவில், கர்நாடக இசைக்கலைஞர் காயத்ரி வெங்கட்ராகவன், தனது இசைத் திறனால் மீனாட்சி, சுந்தரேஸ்வரரை பாடி வழிபட்டார்,மதுரை சத்குரு சங்கீத சமாஜத்தில் நடந்த இசைவிழாவில் நேற்று அவரது குழுவினரின் கர்நாடக சங்கீத கச்சேரி நடந்தது.முதல் படைப்பாக தியாகராஜர் இயற்றிய கனராக பஞ்சரத்னம், ஆரபி ராகத்தில், சாதிஞ்சென என்று துவங்கி, ஆதிதாளத்தில் தாளகட்டுடன் இருந்தது. தொடர்ந்து முத்துச்சாமி தீட்சிதர் அருளிய, விநாயகர் துதி, மகா கணபதிம் என்று, கவுளை ராகத்தில் மிஸ் ரசாபு தாளத்தில் சிட்டஸ்வரங்களோடு, கற்பனா ஸ்வரங்கள் அழகுற விளங்கியது. அடுத்ததாக, லதாங்கி ராக ஆலாபனையை சிறப்பாக வழங்கிய காயத்ரி, மரிவேற என்று கண்ட சாபு தாளத்தில் துவங்கி பிரபலமான கீர்த்தனையை விறுவிறுப்புடன் தந்தார். தரலோல நீ சாடி தெய்வமு என்ற வரிகளை நிரவல் செய்தபோது, வயலின் வாசித்த சாருமதியும், காயத்ரியும், சிறந்த ராக சஞ்சாரங்களை படைத்து கைத்தட்டல் பெற்றனர்.வரத வெங்கடேச என்ற லதாங்கி ராக கீர்த்தனையை, கற்பனை ஸ்வரங்களும், குறைப்பும் மேலும் அழகுபடுத்தின. தொடர்ந்து, மதுரை சுந்தரேஸ்வரர் மீது பாபநாசம் சிவன் இயற்றிய ஒருதமிழ்ப் பாடல். உன் பெருமையை எவர் அறிவார் என்று துவங்கி, கரஹப்ரியா ராகத்தில், ஆதிதாளத்தில் நல்லிசையாக அமைந்தது. இசையால் சுந்தரேஸ்வரரை வழிபட்ட காயத்ரி, மதுரை மீனாட்சி மீது ஆகிரி ராகத்தில் ஆதி தாளத்தில் மாயம்மா கீர்த்தனை மனம் உருகி பாடினார். மிருதங்கம் ரவியும், கடம் கிருஷ்ணமூர்த்தியும் தங்கள் பணியை செவ்வனே செய்தனர்.அடுத்து, மெயின் ராகமாக காம்போதி ராகத்தை சிறந்த முறையில் ஆலாபனை செய்த காயத்ரி, குரல் வளத்தையும், இசைத் திறனையும் நிரூபித்தார். ஆடும் தெய்வம் நீதானே என்ற தமிழ் கீர்த்தனையை பாடினார் காயத்ரி.காம்போதி ராகத்தில் அமைந்த இந்த பாடலை இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. நல்ல ஞானமும், தெளிந்த குரலும் பெற்ற காயத்ரி, கச்சேரியை ரசிகர்களுக்கு உரிய விதத்தில் நடத்திச் சென்றார் எனலாம். வயலின் சாருமதி, கவனிக்கப்பட வேண்டிய இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் என்றால், அது மிகையில்லை.